Log in
updated 12:56 PM UTC, Jan 26, 2019
Headlines:

தாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்

தாய்ப்பால்… இந்தச் சொல்லை உச்சரிக்கும்போதே தாய்மையின் மகத்துவத்தை உணர முடியும். சத்துகள் குவிந்து கிடக்கும் தாய்ப்பாலை நாம் அமுதம் என்கிறோம், மேற்கத்திய நாடுகள் Liquid Gold என்கின்றன. பழங்கால இலக்கியங்கள் முதல் இன்றைய இணைய அறிவியல் யுகம் வரை தாய்ப்பாலின் மகத்துவத்தை கொண்டாடுகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தை தாய்ப்பால் வாரமாக உலக சுகாதார நிறுவனம் கடைபிடிக்கிறது. கி. கோபிநாத், பத்திரிகையாளர்

தாய்ப்பாலில் என்னதான் இருக்கிறது? தாய்ப்பாலில் அப்படி என்னதான் இருக்கிறது? கொழுப்புச் சத்து, சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் A,C,D,B-6,B-12, கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம் என கொட்டிக்கிடக்கிறது. இது இயற்கையின் வரம். நோய்களை விரட்டும் மருத்துவ குணம் கொண்ட தாய்ப்பாலின் மூல செல்கள் அதாவது ஸ்டெம் செல்களுக்கு மறதி வியாதி மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுப்பது சிறந்தது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுடன், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். புரோட்டீன், கால்சியம் குறைபாடு இருந்தால் தாய்ப்பால் உற்பத்தி பாதிக்கப்படும். சீம்பால் அதாவது குழந்தை பிறந்தவுடன் தாய் கொடுக்கும் முதல் பால், அளவில் குறைவாக இருந்தாலும், தரத்திலும், குழந்தையைக் காக்கும் குணத்திலும் கில்லிதான். இதுதான் முதல் தடுப்பு மருந்து.

இதையெல்லாம் தாண்டி தாய்ப்பால் சுரப்பிகள் நிகழ்த்தும் அதிசயத்தை இறைவன் சித்தம், இயற்கை நியதி என எப்படி வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம். தாய்ப்பால் சுரக்கும் தன்மையானது ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் வேறுபடுகிறது. ஒரு தாய் தனது பெண் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது இயல்பாகவே பாலில் உள்ள கொழுப்பு, புரோட்டீன் அளவு குறைந்துவிடுகிறது. ஒரு வயதுக்கு மேல் குழந்தை தாயிடம் பால் குடிக்கும்போது, கொழுப்பையும், உடலுக்கு தேவையான சக்திகளை கொடுக்கும் சத்துகளை சுரப்பிகள் அதிகரிக்கின்றன. குழந்தைக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும்போது, தாய் கொடுக்கும் பாலின் தன்மை அதற்கேற்ப மாறிவிடுகிறது. அதாவது பாலில் Antibodies, லூகோசைட்டுகள் அதிகரித்து குழந்தை குணமாக உதவுகிறது. அதேபோல் அந்தி நேரத்தில் சுரக்கும் தாய்ப்பாலில் தூக்கத்தை வரவழைக்கும் நியூக்கிளியோடைடுகள் அதிகம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   தேவையான அளவு தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் பெற்று ஆரோக்கியமாக இருப்பதுடன், மூளை செயல்திறன் அதிகம் பெற்று சுறுசுறுப்பாக புத்திக் கூர்மையுடன் இருப்பார்கள். தாய்ப்பாலில் எல்லா ஊட்டச்சத்துகளும் தேவையான அளவு இயற்கையாகவே உள்ளதால், குழந்தையின் உடல் அவற்றை சரியாக கிரகித்து ஜீரணிக்கும். மனிதனுக்கு 3 வயது வரை மூளை வளர்ச்சி அடையும். எனவே 2 வயது வரை தாய்ப்பாலும், அடுத்த ஒரு வருடம் பசும்பாலும் கொடுப்பதே போதுமானது. அதன்பிறகு பால் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மகத்துவம் மிக்க தாய்ப்பாலை, பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை என்பதுதான் வேதனையான உண்மை. அதிகபட்சம் ஆறு மாதங்கள்தான். முன்பெல்லாம் பாட்டிமார்கள் தாய்ப்பாலின் அவசியத்தை எடுத்துக்கூறி, அதனை கொடுக்க வைத்தனர். ஆனால் இப்போதைய பாட்டிகளே தங்கள் மகன்/மகள்களுக்கு முறையாக தாய்ப்பாலை கொடுத்திருக்க மாட்டார்கள். தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் நல்லது…
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டுமின்றி, தாய்க்கும் மிக நல்லது. தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்து வந்தால் கருப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. தாய்ப்பால் கொடுக்கும்போது தினமும் சுமார் 600 கலோரிகள் வெளியாவதால் கர்ப்பகாலத்தில் கூடிய எடை குறையும். பால் சுரக்கறதே இல்லை, அப்புறம் எப்படி கொடுக்கிறது என போகிற போக்கில் ஒரு கேள்வியை போட்டுவிட்டு ரசாயனங்களால் பதப்படுத்தப்படும் பாக்கெட் பாலையும், பால் பவுடரையும் குழந்தைகளுக்கு புகட்டும் தாய்மார்கள் அதிகம். பால் சுரக்க அகத்தி கீரை, பருப்பு கீரை, பூண்டு, தனியா, சுரக்காய், பேரிக்காய் இப்படி எத்தனையோ பொருட்கள் உள்ளன. ஆனால் இதற்கெல்லாம் மெனக்கெட தாய்மார்கள் தயாராக இல்லை. தாய்ப்பால் கொடுக்கவே இயலவில்லை எனும்பட்சத்தில், பசும்பால் கொடுக்கலாம். தாய்ப்பாலுக்கு சற்றே இணையான குணங்களும், ஊட்டங்களும் நிறைந்தவைதான் பசும்பால். பவுடர் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்? ஆனால் குழந்தைகளுக்கு பால் பவுடர் கரைத்து தருவது உகந்ததல்ல என்பதே மரபு வழி மருத்துவர்களின் அறிவுரை. திரவ வடிவிலான பாலை, திடப் பொருளாக மாற்ற மெலமைன் (பிளாஸ்டிக் தயாரிக்கும்போது பயன்படுகிறது) எனும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டும்போது இது குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் டைஃபாய்டு தொற்றை ஏற்படுத்துவதுடன், குழந்தைகளின் உடலுக்கு ஒவ்வாத சில பாக்டீரியாக்கள் கலந்திருக்கவும் வாய்ப்புள்ளது.   மனிதனின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு கொடுக்கத் தவறமாட்டோம் என ஒவ்வொரு தாய்மாரும் சபதம் ஏற்றால் வரும் தலைமுறையாவது நோய் நொடிகளுக்கான வாய்ப்புகள் குறைந்து ஆரோக்கியமாக இருக்கும்.
Last modified onFriday, 12 October 2018 18:29

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

22°C

Chennai

Mostly Clear

Humidity: 80%

Wind: 17.70 km/h

  • 04 Jan 2019 25°C 22°C
  • 05 Jan 2019 26°C 23°C